மனித கழிவுகளை மனிதனே அள்ளியதாக புகார்: தேசிய துப்புரவு தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் ஆய்வு
மனித கழிவுகளை மனிதனே அள்ளியதாக புகார் எழுந்ததையடுத்து தேசிய துப்புரவு தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார்.
மனித கழிவுகள் அகற்றம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கண்ணக்கபட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 360-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட குடியிருப்பில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக அமைக்கப்படாததால் அதில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து சிறிய அளவில் அங்குள்ள செடிகளுக்கு பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள கழிவுநீர் பொது வெளியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் கண்ணக்கபட்டு பொதுமக்களுக்கும் பதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்து வந்தது.
சில நாட்களுக்கு முன்பு கழிவுநீர் தேக்க தொட்டியில் மனித கழிவை மனிதனே அள்ளியது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது.
ஆய்வு
இதுகுறித்து விடியோ பதிவுடன் டெல்லி தேசிய துப்புரவு தொழிலாளர்கள் நலவாரிய நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் தேசிய துப்புரவு தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் வெங்கடேசன் அடுக்குமாடி குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர்களுடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வருவாய்த் துறையினர், திருப்போரூர் பேரூராட்சித் தலைவர் தேவராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தினர் கூறுகையில்:-
நாங்கள் யாரும் முன்வந்து அதில் உள்ள கழிவுகளை அகற்ற சொல்லவில்லை திருப்போரூர் பகுதியை சேர்ந்த ஒருவர் தானாக முன்வந்து மனித கழிவுகளை அகற்றியதாக தெரிவித்தனர்.
தேசிய துப்புரவு தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் வெங்கடேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது கடுமையான தண்டனைக்கு உரிய குற்றம். சம்பந்தப்பட்டவரை நேரில் அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
2013 சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட தொழில். இதனை யாரும் இது போன்று செய்யக்கூடாது கட்டாயபடுத்தி யாராவது இறக்கினால் அவர்கள் சிறை தண்டனையுடன் அபராதமும் செலுத்தவேண்டியிருக்கும். இது போன்ற தொழிலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சுயதொழில் ஏற்படுத்திகொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாத வகையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆங்காங்கே பெயர் பலகை வைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் புதுடெல்லி தேசிய ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் இயன்முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013. நடைமுறைபடுத்துதல் குறித்த கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றி குமார் தாட்கோ மேலாளர் தபசு கனி, மண்டல இயக்குனர் நகராட்சிகள் நிர்வாகம் சசிகலா, செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் இளம்பருதி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் ஆணைய தலைவர் வெங்கடேசன் குறைகளை கேட்டறிந்து அதனை உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய அலுவருக்கு உத்தரவிட்டார். மேலும் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தத்தின்படி பணியாளர்களின் நலன், பணிபுரியும்போது வழங்கப்பட வேண்டிய உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.