பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருப்பதாக புகார்: இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கேட்டு 3 பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வழக்கு- உள்துறை செயலாளர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருப்பதாக புகார்:  இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கேட்டு 3 பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வழக்கு-  உள்துறை செயலாளர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்குவது குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்குவது குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பதவி உயர்வு தாமதம்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மணிமொழி, இந்திரா காந்தி, ஜெயலட்சுமி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நாங்கள் 3 பேரும் 1991-ம் ஆண்டில் போலீஸ் கான்ஸ்டபிள்(கிரேட் -1) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோம். பின்னர் 1998-ம் ஆண்டில் தலைமை காவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2009-ம் ஆண்டில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்றோம். கடந்த 30 ஆண்டுகளாக காவல்துறையில் நேர்மையாக பணியாற்றி வருகிறோம்.

போலீஸ் கான்ஸ்டபிள் கிரேட்-1 இருந்து 5 ஆண்டுகள் பணி செய்தால் தலைமை காவலராக பணி உயர்வு வழங்கப்பட வேண்டும். அதன் பிறகு 10 வருடம் பணி நிறைவடைந்த உடன் சப்-இன்ஸ்பெக்டர் பணி உயர்வு வழங்க வேண்டும் என்பது விதிமுறை.

விதிமுறைகளின்படி எங்களுக்கு 2016-ம் ஆண்டில் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை எங்களுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வை வழங்கப்படவில்லை. இது சட்டவிரோதம்.

பட்டியலில் பெயர் இல்லை

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே உடனடியாக எங்களை இன்ஸ்பெக்டர் ஆக பதவி உயர்வு மற்றும் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் எஸ்.செந்தில்குமார், ஞானவேல் ஆகியோர் ஆஜராகி, 2022-23-ம் ஆண்டில் தமிழகத்தில் 580 போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் அதற்கு தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில் மனுதாரர்கள் பெயர் இடம்பெறவில்லை.

2019-ம் ஆண்டிலேயே இன்ஸ்பெக்டர் பதவி உயர்வை மனுதாரர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். தற்போது பதவி உயர்வு பெறும் இன்ஸ்பெக்டர்கள் பட்டியலிலும் இவர்களை சேர்க்காதது ஏற்புடையதல்ல. இவர்களைப்போல ஏராளமான சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு பெறாமல் உள்ளனர் என வாதாடினார்கள்.

உள்துறை செயலாளருக்கு உத்தரவு

விசாரணை முடிவில், மனுதாரர்களுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்குவது குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.


Next Story