தம்பதி மீது குவியும் புகார்கள்


தம்பதி மீது குவியும் புகார்கள்
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் சாய்பாபா பெயரில் மோசடி செய்த தம்பதி மீது புகார்கள் குவிந்து வருகின்றன.

கோயம்புத்தூர்


கோவையில் சாய்பாபா பெயரில் மோசடி செய்த தம்பதி மீது புகார்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

சாய்பாபா அவதாரம்

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் டிராவல்ஸ் மற்றும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கன்டெய்னர் விற்பனை செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் சென்னையை சேர்ந்த லட்சுமிபதி மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகிய 2 பேரும் சந்திரசேகரனை அணுகினர்.

அப்போது, நிர்மலா தான் சாய்பாபாவின் மறு அவதாரம் என கூறி நாங்கள் கூறும் நிறுவனம் மற்றும் தங்களிடம் பணத்தை முதலீடு செய்தால் செல்வம் பெருகும் என கூறியதாக தெரிகிறது. இதை உன்மை என்று நம்பிய அவர், லட்சுமிபதி பங்குதாரராக உள்ள நிறுவனம், மற்றும் அவர்களது உறவினரான 6 பேரிடம் கோவை சிங்காநல்லூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் இருந்து பல தவணைகளாக ரூ.1 கோடியே 45 லட்சத்தை அனுப்பினார்.

பணம் மோசடி

3 மாதத்தில் லாபம் கிடைக்கும் என கூறிய அவர்கள் முதல் தவணையாக ரூ.5 லட்சத்தை லாபம் என கூறி கொடுத்ததுடன் அதில் இருந்து ரூ.3 லட்சத்தை சாய்பாபா கோவிலுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என்று கூறி ரூ.3 லட்சத்தை பெற்றுள்ளனர். தொடர்ந்து அவர்களது வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி வந்த சந்திரசேகரன், ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்து பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார். போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் லட்சுமிபதி, நிர்மலா உள்ளிட்ட 8 பேர் மீது மோசடி, கூட்டு சதி உள்பட 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

குவியும் புகார்கள்

இந்த நிலையில் சென்னை தம்பதியான லட்சுமிபதி மற்றும் நிர்மலா இதேபோல சாய்பாபா பெயரை கூறி ஏமாற்றியதாக அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து புகார்கள் வந்த வண்ணமாக உள்ளது.

குறிப்பாக திருப்பூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது பெற்றோரிடம் ரூ.3 லட்சம் வாங்கிவிட்டு மோசடி செய்ததாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்த தாய், தந்தை இருவரும் உயிரிழந்துவிட்டதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதே போல் திருப்பூரை சேர்ந்த சத்திய நாராயணனண் என்பவரிடம் ரூ.4 லட்சம், திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளத்தை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரை ஏமாற்றி ரூ.2 லட்சம், கோவை ஆர்.எஸ்.புரம் முத்துநாகரத்தினம் என்பவரிடம் ரூ.1.30 லட்சம், கோவை வெள்ளலூரை சேரந்த சூர்யா என்பவரிடம் ரூ.4.15 லட்சம் வாங்கி மோசடி செய்ததாகவும் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story