தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

தியாகம்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் அங்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர். பின்னர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டு மக்கள் அனைவரும் தேசிய கொடியை ஏற்றி வைக்கும் பாக்கியத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார். அதற்காக பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சுதந்திரப் போராட்டத்தில் தென்பாண்டி மண்டலம் மிகப்பெரிய தியாகத்தை செய்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் மதுரையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பங்கெடுத்துள்ளனர். குறிப்பாக மதுரையை சேர்ந்த லட்சுமி காந்த பாரதியின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை கேட்டாலே உடல் புல்லரிக்கும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வாக்கு சரிந்து விட்டது. இன்றைக்கு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் மயமாகவே உள்ளது. பெரியவர்கள், மாணவர்கள் மட்டுமே போதைக்கு அடிமையாக இருந்த நிலையில் தற்போது மாணவிகளும் போதையில் சுற்றும் நிலை உள்ளது. போதை பொருளை ஒழிக்க சர்வாதிகாரியாக மாறுவேன் என ஸ்டாலின் சொல்வது எல்லாம் வெறும் விளம்பரம் தான்.

பூரண மதுவிலக்கு

தி.மு.க. தேர்தல் காலத்தில் சொன்ன மது ஆலைகளை மூடுவோம், மதுவிலக்கை கொண்டு வருவோம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். வீடியோ சேனல்களில் வரும் போதைப் பொருள்கள் பயன்படுத்துவது போன்ற காட்சிகளை எல்லாம் தடை செய்ய வேண்டும். எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் விட்டு விட்டு நாடகம் நடத்தினால் மக்கள் ஒரு போதும் அதை நம்ப போவதில்லை. போதைப்பொருட்களை காவல்துறை உதவியில்லாமல் விற்க முடியாது.

அ.தி.மு.க.வை யாராலும் மிரட்ட முடியாது. அசைக்க முடியாது. அ.தி.மு.க. எழுச்சியை தடுக்க முடியாது. காவல்துறை சரியாக செயல்படவில்லை. அதிகாரிகளின் கைகள் கட்டி போடப்பட்டுள்ளது. நல்ல காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது. மாணவிகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆவினில் சரியான அளவில் பால்பாக்கெட் கொடுக்க அந்த துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். எங்கள் ஆட்சியின் மதுவால் அவல நிலை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. தி.மு.க. ஆட்சியில் மதுவால் அவலநிலை தலை விரித்தாடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story