தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட பா.ம.க. மகளிரணி ஆலோசனை கூட்டம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாநில மகளிரணி தலைவர் நிர்மலாராஜா தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர்கள் ஏந்தல் பெ.பக்தவச்சலம், இல.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட பொருளாளர் வீரம்மாள் வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சக்திகமலாம்மாள் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். திருவண்ணாமலையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஏற்படுத்த வேண்டும்.
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளது. எனவே கார்த்திகை தீபத்திருவிழா தொடங்குவதற்கு முன்பாக சாலைகள் அனைத்தும் புனரமைக்க நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைக்காலம் தொடங்கி உள்ளதால் கடந்த ஆண்டுபோல வெள்ள பாதிப்பு இல்லாமல் தடுக்க கால்வாய்கள் அனைத்தும் தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மகளிரணி மாவட்ட செயலாளர் அமலா, கற்பகம், மாவட்ட தலைவர்கள் அம்பிகாரமேஷ், தீபா சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.