தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்-திருச்சியில் நடந்த இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநாட்டில் தீர்மானம்


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்-திருச்சியில் நடந்த இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநாட்டில் தீர்மானம்
x

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில மாநாடு

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில மாநாடு நேற்று திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில தலைவர் பத்மாவதி தலைமை தாங்கினார். வக்கீல் பானுமதி வரவேற்று பேசினார்.

மாநில செயலாளர் மஞ்சுளா அறிமுக உரையாற்றினார். அகில இந்திய பொதுச்செயலாளர் ஆனிராஜா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

33 சதவீத இடஒதுக்கீடு

மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும். பிரதமர் அறிவித்துள்ள விஸ்வகர்மா திட்டத்தை நிறுத்த வேண்டும். அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.13 ஆயிரம் கோடியை வேலைவாய்ப்பை உருவாக்க பயன்படுத்த வேண்டும்.

தேசிய கல்விக்கொள்கைளை முழுமையாக நிராகரிக்க வேண்டும். இந்தி, சமஸ்கிருத திணிப்பை உடனடியாக கைவிட வேண்டும். இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் பெண்கள் திருமண உதவித்தொகை திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

பூரண மதுவிலக்கு

பாலின சமத்துவத்தை இளம் பருவத்தினரிடம் உருவாக்கி, பாலின வேறுபாட்டை களைந்திட பாலியல் கல்வி அவசியம். எனவே பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை இணைத்து, பள்ளி தோறும் மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைகள் அதிகம் நடப்பதை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்.

பெண்களை இழிவு படுத்தும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வேண்டும். பெண் தொழிலாளர்கள் மீதான பாலியல் துன்புறுத்தலையும், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையையும் தடுத்து நிறுத்த வேண்டும். நுண்நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, முன்னாள் மாநில செயலாளர் மாலா மாநாட்டு கொடியை பெற்றார். வசந்தா கொடியேற்றினார்.

மாநில துணை செயலாளர் தியாகிகள் நினைவு சுடரை பெற்றுக்கொண்டார். தமிழ்நாடு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பெண்ணுரிமைக்கான போராட்டங்கள் குறித்த கண்காட்சியை திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை திறந்து வைத்து பேசினார். முடிவில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அஞ்சுகம் நன்றி கூறினார்.

பேரணி-பொதுக்கூட்டம்

இதைத்தொடர்ந்து மதியம் பிரதிநிதிகள் மாநாடு, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 70-ம் ஆண்டு தொடக்கவிழா, முன்னாள் மாநில செயலாளர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) பேரணி-பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.


Next Story