டெல்டா மாவட்டங்களில் முழுஅடைப்பு


டெல்டா மாவட்டங்களில் முழுஅடைப்பு
x

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

காயும் குறுவை நெற்பயிர்கள்

இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இயல்பான பரப்பளவான 3.25 லட்சத்தை மிஞ்சி 5.28 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் பயிரிடப்பட்டது.இந்த நிலையில் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினால் இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது நேற்று முன்தினம்(10-ந் தேதி) அணை மூடப்பட்டது.

கர்நாடக அரசுக்கு கண்டனம்

மேலும் காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் காய்ந்து வருகிறது.இதனால் காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் அறிவித்தனர்.

சாலைகள் வெறிச்சோடியது

இந்த போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளித்தனர். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காய்கறி கடைகள், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள், டிபன் கடைகள், டீக்கடைகள், பழக்கடைகள் என அனைத்து கடைகளையும் வணிகர்கள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயிலடி, காந்திஜி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழு அளவில் கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் தஞ்சை காமராஜர் மார்க்கெட், கீழவாசலில் உள்ள சரபோஜி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

95 சதவீத கடைகள் அடைப்பு

ரெயில்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள், கார், வேன், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் இயங்கியதால் இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பால் விற்பனை கடைகள் வழக்கம்போல் திறந்து இருந்தன. தள்ளுவண்டியில் வைத்து பழங்கள், பூக்கள், காய்கறிகள் வைத்து வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்களது வியாபாரத்தை செய்தனர்.இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் ஓரிரு கடைகள் ஆங்காங்கே திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.இதேபோல் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த கடையடைப்பு போராட்டம் முழு அளவில் வெற்றி பெற்றதாக காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் தெரிவித்தனர்.

முற்றுகை போராட்டம்

காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இதில் அரசியல் கட்சியினர், வணிகர்கள், விவசாயிகள், விவசாய சங்கத்தினர், மகளிர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.இந்த ஊர்வலம் காந்திஜி சாலை வழியாக சென்று எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. பின்னர் எல்.ஐ.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன் சாலையில் அமர்ந்தும் கர்நாடக அரசு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக 1 மணி நேரத்திற்கு மேலாக காந்திஜி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

தஞ்சை, திருவாரூரில் 2065 பேர் கைது

தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருவையாறு, திருவிடைமருதூர் உள்பட மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1260 பேரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி கூத்தாநல்லூர் ஆகிய இடங்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 54 பெண்கள் உள்பட 805 பேர் கைது செய்யப்பட்டனர்.மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுைக போராட்டம் நடந்தது. இதில் விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.இதேபோல் நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், கீழ்வேளூர் உள்பட மாவட்டத்தில் 12 இடங்களில் முற்றுகை போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story