கறம்பக்குடியில் முழு கடையடைப்பு


கறம்பக்குடியில் முழு கடையடைப்பு
x

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி 19-வது நாளாக நடைபெறும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கறம்பக்குடியில் நேற்று முழு கடையடைப்பு நடைபெற்றது.

புதுக்கோட்டை

அரசு மருத்துவமனை

கறம்பக்குடியில் அரசு மருத்துவமனை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இது தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. இந்த மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

30 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை. 3 டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இரவு நேரங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை.

காத்திருப்பு போராட்டம்

மேலும் மருத்துவ உபகரணங்கள் இருந்தும் அதை பயன்படுத்த ஊழியர்கள் இல்லை. செவிலியர் பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன. எனவே கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க வலியுறுத்தி கறம்பக்குடியில் இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 19 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடையடைப்பு

இந்நிலையில் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை உடனே தொடங்க கோரியும், 19 நாட்களாக நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வர்த்தக மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கறம்பக்குடியில் இன்று முழு கடையடைப்பு நடைபெற்றது. காலை 6 மணி தொடங்கி மாலை 6 மணி வரை தரைக்கடை, டீக்கடை, பெட்டிக் கடை, ஓட்டல்கள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கறம்பக்குடி கடைவீதி, சீனி கடை முக்கம், அம்பு கோவில் முக்கம் உள்ளிட்ட பகுதிகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இயல்பு வாழ்க்கை முடக்கம்

தொடர்ந்து கறம்பக்குடி வள்ளுவர் திடலில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் கறம்பக்குடி வர்த்தக மற்றும் வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

கோரிக்கை நிறைவேறும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த கடையடைப்பால் கறம்பக்குடியில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.


Next Story