பா.ஜ.க.வை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம்


பா.ஜ.க.வை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:45 PM GMT)

சிதம்பரம் பகுதியில் நாளை மறுநாள் பா.ஜ.க.வை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர்

சிதம்பரம்,

காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் கே.வி.இளங்கீரன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் ஆர்.கே.சரவணன், மாவட்ட பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிமுன் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரை கூட தடுக்கும் கர்நாடக பா.ஜ.க. மற்றும் பிற அமைப்புகளை கண்டித்தும், நாளை மறுநாள் (புதன் கிழமை) சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதியில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்துவது.

கடையடைப்பு

மேலும் டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சேத்தியாத்தோப்பு, புவனகிரி பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்வது, இந்த போராட்டத்தில் அனைத்து பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், வணிகர் சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவு தெரிவித்து கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாய சங்க தலைவர் கண்ணன், துணை செயலாளர் காஜா மொய்தீன், திராவிடர் கழகம் அன்பு சித்தார்த்தன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குமராட்சி ஒன்றிய தலைவர் வி.கே.ராதா, செயலாளர் புஷ்பராஜ், துணைத்தலைவர் முனுசாமி, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கொளஞ்சியப்பன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் தர்மதுரை, விவசாய தொழிலாளர் சங்கத்தின் புவனகிரி செயலாளர் எஸ்.மணி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story