கழுமலையாறு தூர்வாரும் பணி நிறைவு


கழுமலையாறு தூர்வாரும் பணி நிறைவு
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் கழுமலையாறு தூர்வாரும் பணி நிறைவடைந்ததையொட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழியில் கழுமலையாறு தூர்வாரும் பணி நிறைவடைந்ததையொட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாசன வாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழுமலையாறு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் மேல தேனூர், கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, நிம்மேலி, மருதங்குடி, ஆலஞ்சேரி, தாடாளன் கோவில், சீர்காழி, தென்பாதி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

மேலும் இந்த வாய்க்கால் சீர்காழி நகர் பகுதியில் வடி வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வாய்க்காலை தமிழக அரசு முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தூர்வாரும் பணி

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் மேல தேனூர் முதல் திட்டை வரை தூர்வாரும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டு வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முழுமையாக தூர்வாரப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தூர்வாரும் பணி நிறைவடைந்தது. இதனால் இந்த வாய்க்காலை நம்பி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் கடந்த ஒரு மாதமாக வாய்க்காலில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட பொக்லின் எந்திர டிரைவருக்கு விவசாயிகள் சந்தன மாலை, சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். அதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், தூர்வாரும் பணி சம்பந்தமாக செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.


Next Story