'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ்நிலைய மேற்கூரை சேதம்
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நத்தம், காரைக்குடி பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் மேற்கூரை சேதம் அடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுகிறது. இதனால் அச்சத்துடன் மக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பஸ்நிலைய கட்டிடத்தை பராமரிக்க வேண்டும். -சந்திரா, திண்டுக்கல்.
கூடுதல் ரெயில் பெட்டிகள்
மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிக அளவில் பயணிகள் செல்கின்றனர். இதில் பெரும்பாலான மக்கள் கடைசிநேரத்தில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வாங்கி பயணிக்கின்றனர். அவ்வாறு செல்லும் போது ரெயிலில் நிற்க கூட இடமில்லாமல் மக்கள் தவிக்கின்றனர். எனவே கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். -கண்ணன், திண்டுக்கல்.
மின் வினியோகம் பாதிப்பு
கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சி மலைக்கிராமத்தில் மின் வினியோகம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதனால் மின்சாரம் இல்லாமல் மக்கள் இருளில் தவிக்கும் நிலை உள்ளது. மாணவ-மாணவிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். எனவே தடையின்றி மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வராஜ், வடகவுஞ்சி.
சாலையில் அபாய பள்ளம்
திண்டுக்கல்-திருச்சி சாலையில் மேம்பாலத்தின் பக்கவாட்டில் இருந்து ஜி.டி.என். சாலைக்கு திரும்பும் இடத்தில் சாலை சேதம் அடைந்துவிட்டது. இதனால் பெரிய பள்ளம் உருவாகி விட்டதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இந்த அபாய சாலை பள்ளத்தை மூட வேண்டும். -மகாலட்சுமி, திண்டுக்கல்.
எரியாத தெருவிளக்குகள்
திண்டுக்கல் ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சி அந்தோணியார்தெருவில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து விடுவதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். -முருகன், பள்ளப்பட்டி.
சாலை ஓரத்தில் குப்பைகள்
திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் 2 பள்ளிகள் இருக்கின்றன. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அந்த சாலையில் தினமும் செல்கின்றனர். இந்த சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டி குவிக்கப்படுவதால், மாணவர்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சாலை முழுவதும் புகை பரவி வாகன ஓட்டிகளுக்கு கண்எரிச்சல் ஏற்படுகிறது. அங்கு குப்பைகளை கொட்டாமல் தடுக்க வேண்டும். -மகேஷ், திண்டுக்கல்.
====
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.