'தினத்தந்தி' புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

மின்விபத்து அபாயம்

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி காலனி தெருவில் உள்ள வீடுகளின் மேற்கூரையை உரசுவது போல் மின்சார கம்பிகள் செல்கின்றன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வீடுகளின் அருகில் உள்ள மின்கம்பங்களை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லட்சுமணன், நெய்க்காரப்பட்டி.

தாமதமாக வரும் பஸ்கள்

தேனியை அடுத்த ஆண்டிப்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு, தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் தாமதமாக பஸ் நிலையத்துக்கு வருகின்றன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தாமதமின்றி பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நந்தகோபால், ஆண்டிப்பட்டி.

தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரி முன்பு கொட்டப்படும் குப்பைகள் மீது சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிப்பதுடன் நோயாளிகளும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை கொட்டுவதை தடுப்பதுடன், தீ வைத்து எரிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகதீஸ்வரன், உத்தமபாளையம்.

தெருவிளக்கு வசதி வேண்டும்

பட்டிவீரன்பட்டி 8-வது வார்டு அம்பேத்கர் நகர் கிழக்கு பகுதியில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.

-சரவணக்குமார், பட்டிவீரன்பட்டி.

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

ஆண்டிப்பட்டியை அடுத்த புதுப்பேட்டை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இதுவரை வரவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மேல்நிலை குடிநீர் தொட்டியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமா?

-தாமோதரன், புதுப்பேட்டை.

புதர்மண்டி கிடக்கும் கழிப்பறை

நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கழிப்பறை கட்டிடம் பயன்பாடு இன்றி உள்ளது. மேலும் கட்டிடத்தை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் அந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். கழிப்பறை கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரவின்காந்த், நிலக்கோட்டை.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

தேனியை அடுத்த சருத்துப்பட்டியில் சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மேலும் சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் முறையாக செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிராம மக்கள், சருத்துப்பட்டி.

பள்ளம், மேடாக காட்சியளிக்கும் சாலை

திண்டுக்கல் மாநகராட்சி 33-வது வார்டு மேற்கு மரியநாதபுரம் பகுதியில் அனுமந்தநகரில் இருந்து நத்தம் ரோட்டுக்கு செல்லும் சாலை சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், திண்டுக்கல்.

வாகன ஓட்டிகள் அவதி

செம்பட்டி-திண்டுக்கல் பிரதான சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும் பகுதியில் செடி-கொடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே செடி-கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதிவாணன், நிலக்கோட்டை.

குண்டும், குழியுமான சாலை

உத்தமபாளையம் பழைய புறவழிச்சாலையில் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், உத்தமபாளையம்


Related Tags :
Next Story