நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல்


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல்
x

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல் செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

அரியலூர்

தாமரைக்குளம்:

கட்டாய வசூல்

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் பேசுகையில், மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.35 முதல் ரூ.50 வரை கட்டாய வசூல் நடைபெறுகிறது. அங்கு ஆய்வு செய்து பணம் வாங்கும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துவாஞ்சேரி பகுதியில் இலவச மின் இணைப்புக்கு கம்பம் மட்டுமே உள்ளது. விரைவில் மின் கம்பி இழுத்து மின் இணைப்பு வழங்க வேண்டும். சுக்கிரன் ஏரியின் பாசன பகுதியான சிலுப்பனூர், நானாங்கூர், ஆதனூர், ஓரியூர், கோமான் ஆகிய கிராமங்களை டெல்டா பாசன பகுதியாக அறிவிக்க வேண்டும். ஆவின் நிர்வாகம் தனியாருக்கு இணையாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்திற்கும், தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்திற்கும் இடையில் கதவணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்றார்.

போராட்டம் நடத்தப்படும்

தமிழக விவசாய சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் பேசுகையில், மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தால் கொள்முதல் செய்யப்படுகிற நெல்லுக்கு 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வாங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறி வாங்கினால் நெல்மணிகளை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி போராட்டம் நடத்தப்படும். இந்த ஆண்டு மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை குறைவாக பெய்த காரணத்தால் பருத்தி, மக்காசோளம் பயிர் செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் பயிர் காப்பீடு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். மருவத்தூர் கிராமத்தில் நான்கு வழி சாலை அமைப்பதற்கு விவசாயிகளின் ஒப்புதலோடு நிலத்தை கையகப்படுத்த வேண்டும், என்றார்.

குறிச்சிகுளத்தை சேர்ந்த விவசாயிகள் கடலை செடிகளுடன் வந்து அளித்த மனுவில், குறிச்சிகுளம், கஞ்சமலைபட்டி, துளார் ஊராட்சி பூ குடிகாடு ஆகிய மூன்று கிராமங்களில் நிலக்கடலை, சோளம் மற்றும் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பயிர்களை காட்டு பன்றிகள் மற்றும் கோவில் மாடுகள் இரவில் அழித்து விடுகின்றன. எனவே காட்டுப்பன்றிகள் மற்றும் கோவில் மாடுகளை பிடித்து விவசாயத்தை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

விவசாய பிரதிநிதி செங்கமுத்து பேசுகையில், ஏரி, வரத்து வாய்க்கால், வாரி, சிற்றோடை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயம் செய்வதற்கும், நிலத்திற்கு சென்று வருவதற்கும், விளைய வைத்த பொருளை வெளியே கொண்டு வருவதற்கும், ஏழை மக்கள் ஆடு, மாடுகள் மேய்ப்பதற்கும் இடமில்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எனவே நீர்வழி புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அறுவடை நாட்களில் விவசாய பணிக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. அந்த நாட்களில் 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அந்த திட்டத்தின் தொழிலாளர்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும்.

விவசாயி விஜயகுமார் பேசுகையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அதன் பதிவுகளை துறை அதிகாரிகளும், மாவட்ட கலெக்டரும் கண்காணிக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில், சாக்கு எடை உள்ளிட்ட விவரம் மற்றும் எந்த ரக நெல்லுக்கு எவ்வளவு அழுத்தம் தந்து ஈரப்பதம் இருக்க வேண்டும் என்ற விவரம் உள்ளிட்டவற்றுடன் பதாகை வைக்க வேண்டும். எடைபோடும் எந்திரத்தில் எடை எண்கள் சரியாக தெரியவில்லை. ஆதலால் பெரிய அளவில் டிஜிட்டல் பலகையில் எடை எண்கள் தெரியும்படி வைக்க வேண்டும். மருதை ஆற்றில் உள்ள கருவேல மரங்களை முற்றிலும் அகற்றி ஆற்றின் இருபுறமும் கரை அமைக்க வேண்டும். மழை காலங்களில் மருதை ஆற்றில் வரும் தண்ணீர் இருபுறமும் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர் முற்றிலும் சேதம் அடைகிறது, என்றார்.

பணம் பெறுவதாக குற்றச்சாட்டு

விவசாய சங்க பிரதிநிதி பாண்டியன் பேசுகையில், சம்பா சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய பட்டா, சிட்டா நகல்களை இணைத்து பதிவு செய்து அதன் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இது சம்பந்தமாக கையெழுத்து வாங்க சென்றால் கிராம நிர்வாக அலுவலர்கள் காலம் தாழ்த்துகின்றனர், என்றார்.

மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட பல விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய பண வசூல் செய்வதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில் நுகர்பொருள் வாணிபக் கழக அரியலூர் மண்டல மேலாளர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் பதிலளித்தனர்.


Next Story