கணினி உதவியாளர்கள் ரத்த கையெழுத்திட்டு போராட்டம்


கணினி உதவியாளர்கள் ரத்த கையெழுத்திட்டு போராட்டம்
x

திருவாரூரில் பணிநிரந்தரம் செய்யக்கோரி ரத்தத்தில் கையெழுத்திட்டு கணினி உதவியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

திருவாரூரில் பணிநிரந்தரம் செய்யக்கோரி ரத்தத்தில் கையெழுத்திட்டு கணினி உதவியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

பணிநிரந்தரம்

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணிகளை தொகுப்பதற்கும், தேவையான புள்ளி விவரங்களை சேகரிப்பதற்கும் பயன்படும் வகையில் தற்காலிகமாக 2007 முதல் 2010 வரை கணினி உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தமிழகத்தில் 388 ஊராட்சி ஒன்றியங்களிலும், 37 மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்களிலும் கணினி உதவியாளர்கள் பணி நியமனம் நடைபெற்றது.

ஆனால் இவர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை கணினி உதவியாளர்கள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ரத்த கையெழுத்திடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

ரத்த கையெழுத்திட்டு

மாவட்ட செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மாநில போராட்டக்குழு தலைவர் சந்திரசேகரன், சங்கத்தின் மாநில செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட 34 கணினி உதவியாளர்கள் கலந்து கொண்டு ரத்த கையெழுத்திட்டனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, எழுத்து தேர்வு, இன சுழற்சி முறை இவைகளின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு 16 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம்.

நாங்கள் பணியமர்த்தப்பட்ட காலத்தில் பணியமர்த்தப்பட்ட தொழில்நுட்ப உதவியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு பணி மேற்பார்வையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். கணினி உதவியாளர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்தி இளநிலை உதவியாளர்களாக ஈர்த்துக் கொள்ளலாம் என 2017-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.

முதல்-அமைச்சருக்கு....

ஆனால் இன்று வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. எனவே இந்த அரசாணையின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு அனுப்புவதாகவும் போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.


Next Story