துப்பாக்கி முனையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் கடத்தல்: ரூ.69 லட்சம் பறித்த ரியல் எஸ்டேட் கும்பல் கைது


துப்பாக்கி முனையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் கடத்தல்: ரூ.69 லட்சம் பறித்த ரியல் எஸ்டேட் கும்பல் கைது
x

துப்பாக்கி முனையில் கம்ப்யூட்டர் என்ஜினீயரை கடத்தி ரூ.69 லட்சத்தை பறித்த ரியல் எஸ்டேட் கும்பலை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு

கம்ப்யூட்டர் என்ஜினீயர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர் மோகன்ராஜ் (வயது 42). இவர், சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் கம்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர், தனது நண்பர்களுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த சிதம்பரம் (40) மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த குணசேகரன் ஆகிய 2 பேரும், மோகன்ராஜை சந்தித்து கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் குறைந்த விலையில் நிலம் இருப்பதாகவும், நேரில் வந்தால் பேசி முடிக்கலாம் என்று கூறினர்.இது தொடர்பாக கடந்த 7-ந் தேதி சிதம்பரம் மற்றும் குணசேகரன் உள்ளிட்ட 9 பேர் ஒரு காரில் மோகன்ராஜை சந்தித்து பேச வந்தனர். அவர்களிடம், உடன் வந்த மற்றவர்கள் யார்? என மோகன்ராஜ் கேட்டபோது, தன்னுடன் வந்துள்ளவர்கள் நில தரகர்கள் என்று குணசேகரன் கூறினார்.

கடத்தி மிரட்டல்

இதையடுத்து மோகன்ராஜ் அவர்களுடன் கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, ஊரப்பாக்கம், மேலக்கோட்டையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று நிலங்களை பார்த்த நிலையில், அவரை தையூர் கோமான் நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, ஒரு இடத்தை காட்டிய அவர்கள், திடீரென மோகன்ராஜின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதுடன், அவரது மனைவியுடன் செல்போனில் தொடர்புகொண்டு 'உங்களது கணவரை கடத்தி வைத்துள்ளோம். வீட்டில் நிலம் வாங்க வைத்துள்ள பணத்தை எடுத்து வர வேண்டும், இல்லையென்றால் கொன்று வீசி விடுவோம்' என கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜின் மனைவி, வீட்டிலிருந்த ரூ.69 லட்சத்தை எடுத்து கொண்டு திருப்போரூர் கந்தசுவாமி கோவில் குளம் அருகில் காரில் நின்று கொண்டிருந்த கும்பலிடம் கொடுத்தார். பணத்தை வாங்கி கொண்டு அந்த கும்பல் தப்பி சென்றது. பின்னர், கூடுவாஞ்சேரியில் மோகன்ராஜை இறக்கிவிட்டு சென்று விட்டதாக அவரது மனைவிக்கு தகவல் கொடுத்தனர்.

கும்பல் கைது

இதையடுத்து மோகன்ராஜின் மனைவி தனது நண்பர்களுடன் சென்று மோகன்ராஜை மீட்டார். பின்னர் இதுபற்றி கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக கேளம்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமாரன், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி செல்போன் சிக்னல் மூலம் கடத்தல் கும்பலை நேற்று முன்தினம் சென்னையில் சுற்றி வளைத்தனர்.

இதில், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக அரும்பாக்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (21), மதுரவாயலை சேர்ந்த சரண்குமார் (23), சீனிவாசன் (36), குணசேகரன் (28), பழனிக்குமார் (31) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த மாமன்னன் (31), சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தார்.

பணம் பறிமுதல்

மேலும் இந்த கடத்தல் மற்றும் பணம் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான கமுதியை சேர்ந்த சிதம்பரம் (40) என்ற நபரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ரூ.5 லட்சம், 1 கள்ளத்துப்பாக்கி அரிவாள், 1 கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்டீபன், சின்னையா ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.


Next Story