பள்ளிக்கூடத்துக்கு கணினி, பெஞ்சு வசதி செய்து தர வேண்டும்; மேயரிடம், ஆசிரியர்கள் மனு


பள்ளிக்கூடத்துக்கு கணினி, பெஞ்சு வசதி செய்து தர வேண்டும்; மேயரிடம், ஆசிரியர்கள் மனு
x

பள்ளிக்கூடத்துக்கு கணினி, பெஞ்சு வசதி செய்து தர வேண்டும் என மேயரிடம், ஆசிரியர்கள் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற்பொறியாளர்கள் பாஸ்கர், வாசுதேவன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், பைஜூ, ராமசாமி, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், ஜஹாங்கீர் பாட்சா ‌ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மேபெல்ராணி தலைமையில் ஆசிரியர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மேரிடம் மனு கொடுத்தனர். அதில், இந்த பள்ளிக்கூடத்திற்கு தேவையான கணினி, பெஞ்சு, சேர் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நெல்லை டவுன் சேரன்மாதேவி ரோடு குண்டும் குழியுமாக உள்ளது அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் மனு கொடுத்தனர். 39-வது வார்டு கவுன்சிலர் சீதா பாலன் கொடுத்த மனுவில், பாளையங்கோட்டை தியாகராஜநகர் வடக்கு தெருக்களில் கழிவு நீர் கால்வாயை சீரமைத்து தர வேண்டும்.

13-வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் கொடுத்த மனுவில், நெல்லை சிந்துபூந்துறை நாடார் தெருவில் புதிய குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும். இருதயநகர் பைபாஸ் ரோட்டில் பொது குடிநீர்குழாய் அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

36-வது வார்டு கவுன்சிலர் சின்னதாய் கொடுத்த மனுவில், பாளையங்கோட்டை அன்னை இந்திராநகர் பகுதியில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா, ரேஷன் கடை, சாலை வசதி, புதிய மின் கம்பம் அமைத்து தர வேண்டும். அங்குள்ள பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும் என்று கூறி இருந்தார்.


Next Story