குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்


குற்றாலம் அருவிகளில் குவிந்த  சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 25 Jun 2023 7:54 PM GMT (Updated: 26 Jun 2023 11:56 AM GMT)

குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தண்ணீர் குறைவாக விழுந்ததால் நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்றனர்

தென்காசி

குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தண்ணீர் குறைவாக விழுந்ததால் நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்றனர்.

குற்றாலம் சீசன்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலங்களில் சாரல் மழை பெய்யும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும்.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்ய தொடங்கிய போதே குற்றாலத்தில் சாரல் மழை பெய்யும். இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள்.

சுற்றுலா பயணிகள்

ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் முடியும் தருவாயிலும் குற்றாலத்தில் சீசன் களை கட்டவில்லை. இடையில் இரண்டு முறை மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன்பிறகு மழை இல்லாமல் தண்ணீர் குறைந்தது.

நேற்றும் அருவிகளில் தண்ணீர் மிகவும் குறைந்த அளவே விழுந்தது. விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் குற்றாலத்தில் குவிந்தனர். ஆனால் அருவியில் தண்ணீர் குறைந்த அளவில் விழுந்ததை பார்த்து பலர் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர். சிலர் மட்டும் வரிசையில் நின்று குளித்து சென்றனர். தற்போதைய சூழலில் சாரல் மழை பெய்தால் தான் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.


Next Story