தொடர் மழை காரணமாகபிடமனேரி ஏரி நிரம்பி தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததுபயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை


தொடர் மழை காரணமாகபிடமனேரி ஏரி நிரம்பி தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததுபயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 2 Sep 2023 7:30 PM GMT (Updated: 2 Sep 2023 7:31 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தொடர் மழை காரணமாக தர்மபுரி பிடமனேரி ஏரி நிரம்பி தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர் மழை

தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. மேலும் விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.

மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பென்னாகரம்- 72, ஒகேனக்கல்- 67.4 , நல்லம்பள்ளி-2, பாப்பிரெட்டிப்பட்டி- 29, தர்மபுரி-20, மொரப்பூர்-16, அரூர்-12, பாலக்கோடு-12.4, மாரண்டள்ளி- 10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இடி மின்னலுடன் பெய்த இந்த கனமழையால் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேறும், சகதியுமாக மாறியது.

ஏரி நிரம்பியது

தர்மபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிடமனேரி ஏரி தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த உபரிநீர் கால்வாயை சிமெண்டு கால்வாயாக மாற்றி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோன்று குடியிருப்புகள் மற்றும் அங்குள்ள தொழிற்சாலைகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் ஏரியிலிருந்து ஜிலேபி, கட்லா, ரோகு உள்ளிட்ட பல வகையான மீன்கள் ஏரியின் உபரி நீர் செல்லும் கோடி வழியாக வெளியேறி வயல்களில் புகுந்தது. இதை அடுத்து விவசாய நிலங்களில் புகுந்த மீன்களை பிடித்து வருகின்றனர்.

பயிர்களுக்கு இழப்பீடு

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், பிடமனேரி ஏரிக்கு கீழ்பகுதியில் 50 ஏக்கர் நிலப்பரப்பில், நெல் பயிர் நடவு செய்துள்ளோம். தொடர் மழை காரணமாக ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரினால் நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கியது. மாவட்ட நிர்வாகம் நீர்வரத்து கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினர்.


Next Story