தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,583 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,583 வழக்குகளுக்கு சமரச தீர்வு
சிவகங்கை
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் சத்திய நாராயணன் மற்றும் வழக்கறிஞர்கள் ராஜாராம், ராமலிங்கம் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் மொத்தம் 2,397 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1,564 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது. இதன் மூலம் ரூ.95 லட்சத்து 64 ஆயிரத்து 692 வரை இழப்பீடாக வழங்கப்பட்டது. அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 550 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 19 வழக்குக்கு தீர்வு காணப்பட்டது. நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,583 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 14 லட்சத்து 59 ஆயிரத்து 692 வரை பயனாளிகளுக்கு கிடைத்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.