மக்கள் நீதிமன்றம் மூலம் 4,022 வழக்குகளுக்கு சமரச தீர்வு
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 4 ஆயிரத்து 22 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 4 ஆயிரத்து 22 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
சேலம் அஸ்தம்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தை சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கலைமதி தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தங்கராஜ் வரவேற்றார். இதில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெகநாதன் மற்றும் வக்கீல் சங்க தலைவர் முத்துசாமி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கில் சமரச தீர்வு எட்டப்பட்டு குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சத்து 70 ஆயிரத்துக்கான இழப்பீட்டு தொகையை முதன்மை நீதிபதி கலைமதி வழங்கினார்.
சமரச தீர்வு
இதில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி கிறிஸ்டல் பபிதா நன்றி கூறினார். மேட்டூர், சங்ககிரி, ஓமலூர், எடப்பாடி, ஆத்தூர், வாழப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் 23 அமர்வுகளில் சமரசம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், சிவில் வழக்குகள், சிறு வழக்குகள் என மொத்தம் 7 ஆயிரத்து 680 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன.
இதில் 4 ஆயிரத்து 22 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.36 கோடியே 29 லட்சத்து 23 ஆயிரத்து 465 க்கு தீர்வு தொகை பெறப்பட்டது.