மத்திய அரசை கண்டித்து 4 இடங்களில் சாலை மறியல் போராட்டம்


மத்திய அரசை கண்டித்து 4 இடங்களில் சாலை மறியல் போராட்டம்
x

மத்திய அரசை கண்டித்து 4 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 1,013 பேர் கைது செய்யப்பட்டனர்.

மறியல் போராட்டம்

விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை போன்ற காரணங்களுக்காக மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக கட்சியின் மாநில குழு உறுப்பினர் ராதிகா தலைமையில் நிர்வாகிகள் பலர் காளை மாட்டு சிலை பகுதியில் நேற்று காலை திரண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

கைது

மறியல் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் கூறினர். இதையடுத்து அங்கேயே சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். அப்போது சிலர் கைதாக மறுப்பு தெரிவித்து சாலையிலேயே தரையில் படுத்து கொண்டனா். அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று போலீசார் வேனில் ஏற்றினர். மேலும், அங்கிருந்த ஒருசிலர் வேகமாக ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர். இதில் 123 பெண்கள் உள்பட மொத்தம் 308 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோபி

கோபி பஸ் நிலையம் அருகே அங்குள்ள சத்தியமங்கலம் ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனுசாமி தலைமை தாங்கினார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விரைந்து செயல்பட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 317 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரு வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கோபியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்தியூர்

அந்தியூரில் ரவுண்டானா பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அந்தியூர் தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டதாக 100 பெண்கள் உள்பட 325 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே உள்ள கடம்பூர் பஸ் நிலையம் அருேக நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு வட்டார செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார்.

இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 63 பேரை கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.


Related Tags :
Next Story