கர்நாடக அரசை கண்டித்து ரெயில் மறியலுக்கு முயன்ற 25 பேர் கைது
கர்நாடக அரசை கண்டித்து ரெயில் மறியலுக்கு முயன்ற 25 பேர் கைது செய்யப்பட்டனா்
காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஈரோட்டில் ரெயில் மறியலுக்கு முயன்ற 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டம்
காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட் டது. அதன்படி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் தலைமையில் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று காலை திரண்டனர். அவர்கள் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து அவர்கள் ரெயில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக நடந்து சென்றனர்.
25 பேர் கைது
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், தெய்வராணி மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது ரெயில் மறியல் போராட்டத்துக்கு அனுமதி கிடையாது என்று போலீசார் கூறினர். அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரெயில் நிலையத்தை நோக்கி செல்ல முயன்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.
இதில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.