கீரணத்தம் பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


கீரணத்தம் பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதை கண்டித்து  பொதுமக்கள் சாலை மறியல்
x

கீரணத்தம் பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்குட்பட்ட கீரணத்தம் ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவுநீர் கடந்த சில நாட்களாக வெளியேறி கொண்டயம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். இதன்காரணமாக பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கழிவுநீர் வெளியேறும் பகுதிக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:- கடந்த சில நாட்களாக அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது, இந்த துர்நாற்றத்தால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story