தூத்துக்குடியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் சொத்து வரி, மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் நேற்று காலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு சொத்து வரி, வீட்டு வரி, மின்கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி உள்ளது. இந்த வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, தமிழகம் முழுவதும் 3 கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்த அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். அதன்படி முதல் கட்டமாக பேரூராட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நேற்று மாநகராட்சி, நகராட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது, தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஒரு முறைகூட வரி உயர்த்தப்படவில்லை. ஆனால் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற 18 மாதத்திலேயே சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் என அனைத்தும் இரட்டிப்பாக உயர்ந்து விட்டது. தி.மு.க அதன் தேர்தல் அறிக்கையில் 520-க்கும் மேற்பட்ட பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டது. அதில் ஒன்றை கூட இந்த 18 மாத ஆட்சியில் நிறைவேற்றவில்லை. சொந்த வீடு வைத்திருப்போர் தங்கள் வருவாய் அனைத்தையும் வரிக்கட்டியே ஓய்ந்து விடுகிறார்கள். மின்சாரக்கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் மின்சாரத்துக்கு முதல் நூறு யூனிட் மின்சாரத்தை இலவசமாக கொடுத்து தமிழகதில் ஏழை எளிய மக்களுக்கு வாழ்வை, ஒளிவிளக்கை கொடுத்தவர்தான் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அதை அப்படியே வழிநடத்தி நல்லாட்சி செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஆகையால் அனைவரும் வரும் காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமைய பாடுபட வேண்டும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர்என். சின்னத்துரை, மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட செயலாளர் ரா.ஹென்றி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காயல்பட்டினம்
காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நகர அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் காயல் மௌலானா வரவேற்றுப் பேசினார். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர துணை செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், நகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுயம்பு, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை அமைப்பாளர் ஓடை கண்ணன், எம் ஜி ஆர் மன்ற செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், மாவட்ட அணிசாராஅமைப்பின் செயலாளர் பெருமாள்சாமி, ஆறுமுகநேரி நகர செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் பகவத்சிங் பஸ்நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மகாலிங்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி மகாலிங்கம், கானம் நகர செயலாளர் செந்தமிழ் ேசகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.