சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து காங்கிரசார் போராட்டம்
மேல்புறம் அருகே நிதி ஒதுக்கி 5 மாதமாகியும் சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
களியக்காவிளை,
மேல்புறம் அருகே நிதி ஒதுக்கி 5 மாதமாகியும் சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரசார் போராட்டம்
மேல்புறம் அருகே செம்மாங்காலை சந்திப்பில் இருந்து பரக்குன்றுக்கு செல்லும் 3½ கிலோ மீட்டர் தூரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக படுமோசமாக இருந்தது. இதையடுத்து பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு சாலை செப்பனிடும் பணியை கடந்த டிசம்பர் மாதம் விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில் 5 மாதங்களாகியும் சாலையை ஒப்பந்ததாரர் முறையாக சீரமைக்கவில்லை, ஜல்லிகள் கொட்டப்பட்டு அரைகுறையாக இருக்கிறது. இதனால் அந்த சாலையில் தினமும் விபத்துகள் ஏற்படுவதாகவும், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கூறி செம்மங்காலை சந்திப்பில் காங்கிரசார் திரண்டனர். பின்னர் மேல்புறம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரவிசங்கர் தலைமையில் காங்கிரசார் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒப்பந்ததாரரை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர். பின்னர் திடீரென அவர்கள் சாலைக்கு சென்று மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
உடனே போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்து சுமூக தீர்வு காணப்பட்டது. அதில் 15 நாட்களுக்குள் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து காங்கிரசார் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த போராட்டத்தில் மருதங்கோடு காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின், மலையடி காங்கிரஸ் தலைவர் ஜிஜி, மாவட்ட கவுன்சிலர் அம்பிளி, ஜோதிஷ் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.