நகராட்சி கூட்டத்தில் ஆணையர் கலந்து கொள்ளாததை கண்டித்துதி.மு.க., கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு
பெரியகுளம் நகராட்சி கூட்டத்தில் ஆணையர் கலந்து கொள்ளாததை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பெரியகுளம் நகராட்சி கூட்டம் கடந்த 24-ந்தேதி நடந்தது. அப்போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் ஒத்தி வைக்கபட்டது. இந்நிலையில் மீண்டும் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார். தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 26 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் கலந்து கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க., கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அ.ம.மு.க., பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது நகராட்சி ஆணையர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததை கண்டித்தும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டபடி வெளிநடப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. நகராட்சி கவுன்சிலர்கள் குழுத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள், குடிநீர் பிரச்சினைக்கு சரியான பதில் அளிக்காத நகராட்சி தலைவரை கண்டித்து வெளி நடப்பு செய்தனர். இதையடுத்து கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டம் தொடங்கி சிறிது நேரத்திலேயே முடிவடைந்ததால் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.