குடிநீர் வழங்காததை கண்டித்துபெண்கள் சாலை மறியல்
கண்டமனூர் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கண்டமனூர் அருகே புதுராமச்சந்திராபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 3 வாரங்களாக புதுராமச்சந்திராபுரம் கிராமத்திற்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் இந்த கிராமத்தில் பல மாதங்களாக சாக்கடை வடிகால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கண்டமனூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று காலை குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த கண்டமனூர் போலீசார் புதுராமச்சந்திராபுரம் கிராமத்திற்கு சென்றனர். அப்போது பெண்கள் தேனி-வருசநாடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பொதுமக்களை சாலை ஓரமாக அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் மற்றும் சாக்கடை வடிகால் பிரச்சினை தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.