விலைவாசி உயர்வை கண்டித்து 11 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


விலைவாசி உயர்வை கண்டித்து  11 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x

விலைவாசி உயர்வு

ஈரோடு

விலைவாசி உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோட்டில் நடந்த போராட்டத்தில் 111 பேர் கைது செய்யப்பட்டனர்.

மறியல் போராட்டம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை மாவு, பருப்பு, தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் உயர்வை திரும்ப பெற வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். தமிழ்நாடு அரசு வீட்டுவரி, சொத்து வரி, மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்துவதை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் கட்சியினர் ஈரோடு தலைமை தபால் அலுவலகம் பகுதியில் திரண்டனர். மாவட்ட துணைச்செயலாளர்கள் சின்னசாமி, குணசேகரன், பொருளாளர் ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்டாலின் குணசேகரன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

111 பேர் கைது

கட்சியினர் தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீஸ் வேன்களில் ஏற்றினார்கள். இதில் 5 பெண்கள் உள்பட மொத்தம் 111 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் பெருந்துறை, புஞ்சைபுளியம்பட்டி, பவானி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் உள்பட மொத்தம் 11 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story