பராமரிப்பில்லாத பொது சுகாதார வளாகங்கள்


பராமரிப்பில்லாத பொது சுகாதார வளாகங்கள்
x

பராமரிப்பில்லாத பொது சுகாதார வளாகங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

திருப்பூர்


வந்தாரை வாழ வைக்கும் ஊராக விளங்கும் திருப்பூர் மாநகரில் உள்ளூர், வெளியூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தவரும் தங்கி பனியன் தொழில் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருப்பூரில் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூரில் பல்வேறு இடங்களில் உள்ள பொது சுகாதார வளாகங்கள் (கழிப்பிடங்கள்) சரிவர பராமரிக்காமல் பூட்டி கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறியதாவது:-

சமூக விரோத செயல்கள்

கமலேஷ்குமார், (கொங்கு மெயின் ரோடு):-

திருப்பூர் சாந்தி தியேட்டர் அருகில் பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள பொது கழிப்பிடம் பராமரிப்பு இன்றி பூட்டி கிடக்கிறது. இந்த பகுதியில் பஸ் ஏறுவதற்காக நிறைய மக்கள் வருகின்றனர். இந்த நிலையில் பொதுகழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இந்த கழிப்பிடம் பூட்டி கிடப்பதால் மதுப்பிரியர்கள் இங்கே அமர்ந்து மதுகுடித்து விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே இந்த பொது கழிப்பிடங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோகரன், (வேன் உரிமையாளர்):-

இந்த பகுதியில் டிராவல்ஸ் வாகன நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் ரொம்ப காலமாக வாகனம் ஓட்டி வருகிறேன். இங்கு பெரும்பாலான டிராவல்ஸ் ஓட்டுனர்கள் காலை முதல் இரவு வரை காத்திருக்கின்றனர். ஆனால் பொது கழிப்பிடம் பராமரிப்பின்றி உள்ளதால் திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். மேலும் இங்குள்ள மாற்றுத்திறனாளிகள் பொது கழிப்பிடத்தை மாற்றுத்திறனாளிகள் அதிகம் வசிக்கும் இடத்திற்கு மாற்றி வைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

ஆட்களை நியமிக்க வேண்டும்

சர்க்கரை பீர்முகமது, (எம்.ஜி.ஆர். காலனி):-

திருப்பூர் நேரு ரோடு அருகில் 5 வருடங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இதனால் தற்போது ஒரு பெண் கழிவறை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இந்த கழிப்பிடமும் சுத்தம் செய்ய ஆட்கள் இல்லாமல் பராமரிப்பு இன்றி இருக்கிறது. மேலும் இரவில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை கழிப்பிடத்தில் போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் இந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பொது கழிப்பிடத்தை பராமரித்து சுத்தம் செய்வதற்கு ஆட்களை நியமிக்க வேண்டும்.

எஸ்.நூர்ஜகான், (எம்.ஜி.ஆர்.காலனி):-

இந்த பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்தில் மின்விளக்கு எரிவது இல்லை. இதனால் இரவில் இந்த கழிப்பிடத்தை பயன்படுத்துவதற்கு பெண்கள் பயப்படுகின்றனர். மேலும் இந்த பொது கழிப்பிடத்தில் உள்ள தண்ணீர் குழாய் பழுதடைந்து உள்ளதால் பொதுமக்கள் தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்து உள்ள பொது கழிப்பிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரோஜா, (எம்.ஜி.ஆர்.காலனி):-

இந்த பகுதி கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் இருப்பதினால் பொதுமக்கள் அருகில் உள்ள சின்னான் நகருக்கு சென்று அங்குள்ள கட்டண கழிப்பிடத்தை பயன்படுத்துகின்றனர். எனவே இந்த இலவச பொது கழிப்பிடத்தை கட்டண கழிப்பிடமாக கூட மாற்றி ஆட்களை நியமித்து பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறினர்.

இதேபோல் ஸ்டேட் பேங்க் காலனி 2-வது வீதி அருகில் உள்ள பொதுகழிப்பிடமும் பராமரிப்பு இல்லாமல் பூட்டி கிடக்கிறது. பொதுமக்களின் அவசர தேவைக்காக பயன்படுத்தப்படும் இதுபோன்ற இலவச பொது கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து இருப்பது, தகாத சம்பவங்கள் நடப்பது மக்களை வேதனை அடைய செய்துள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பொது கழிப்பிடங்களை ஆய்வு செய்து சீரமைத்து கொடுத்தால் பொதுமக்கள் நிம்மதி அடைவர்.


Related Tags :
Next Story