ஓய்வு பெற்ற கண்டக்டரிடம் ஏ.டி.எம்.மில் மோசடி செய்து தப்பியவர் சிக்கினார்- பணத்தை இழந்தவரே போலீசாருடன் பிடித்ததால் பரபரப்பு


ஓய்வு பெற்ற கண்டக்டரிடம் பணம்எடுத்து தருவதாக மோசடி செய்து விட்டு தப்பியவரை போலீசாரிடம் அடையாளம் காண்பித்து அவரே பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் ஓய்வு பெற்ற கண்டக்டரிடம் பணம்எடுத்து தருவதாக மோசடி செய்து விட்டு தப்பியவரை போலீசாரிடம் அடையாளம் காண்பித்து அவரே போலீசாருடன் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓய்வு பெற்ற கண்டக்டர்

ஆரணி கொசப்பாளையம் வடியராஜா தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 72). இவர் சென்னையில் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். கடந்த மாதம் தச்சூர் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனது ஏ.டி.எம். கார்டில் பணம் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது அருகில் இருந்த ஒரு இளைஞரிடம் கார்டை கொடுத்து ரூ.22 ஆயிரத்து 500-ஐ எடுத்துக் கொடுக்கும்படி கேட்டு ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்துள்ளார்.

கார்டை ஏ.டி.எம்.எந்திரத்தில் செலுத்திய அந்த நபர் ஏ.டி.எம்.வேலை செய்யவில்லை எனக் கூறி தனது ஏ,.டி.எம்.கார்டை அவரிடம் கொடுத்து விட்டு கோவிந்தராஜின் கார்டை வைத்துக்கொண்டார்.

சற்று நேரத்தில் கோவிந்தராஜின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் ரூ.22 ஆயிரத்து 500 எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்ததையும் வேறு ஏ.டி.எம்.கார்டு இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் வங்கியில் புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று கோவிந்தராஜ் போலீசாருடன் வங்கி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் வந்தபோது போலீசாரிடம் அடையாளம் காட்டினார். உடனே அந்த நபர் தப்ப முயன்றார். போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

புதுடெல்லி வாலிபர்

விசாரணை நடத்தியதில் சம்பந்தப்பட்ட நபர் புதுடெல்லி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார் (31) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 11 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது சம்பந்தமாக தொடர்ந்து ஆரணி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சய் குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story