இரும்பு வியாபாரி கழுத்தை நெரித்து கொலை:வேலை தர மறுத்ததால் தீர்த்துக் கட்டினேன்கைதான தொழிலாளி வாக்குமூலம்
வேலை தர மறுத்ததால் வியாபாரியை தீர்த்துக் கட்டினேன் என்று சேலத்தில் இரும்பு வியாபாரி கொலையில் கைதான தொழிலாளி வாக்குமூலம் அளித்து உள்ளார்.
சேலம்
வேலை தர மறுத்ததால் வியாபாரியை தீர்த்துக் கட்டினேன் என்று இரும்பு வியாபாரி கொலையில் கைதான தொழிலாளி வாக்குமூலம் அளித்து உள்ளார்.
கூலி தொழிலாளி
சேலம் அன்னதானப்பட்டி பாஞ்சாலி நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 48). இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் பழைய இரும்பு வாங்கி விற்பனை செய்து வந்தார். இவரது கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த முனியப்பன் (33). கூலி தொழிலாளியாக வேலை பார்த்தார்.
நேற்று முன்தினம் இரவு அன்பழகனை, முனியப்பன் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
தீர்த்துக் கட்டினேன்
போலீசில் முனியப்பன் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-
இரும்பு கடையில் கடந்த சில வருடங்களாக வேலை பார்த்து வந்தேன். அப்போது கூலி மட்டும் இல்லாமல், அவ்வப்போது அன்பழகனிடம் முன்பணம் வாங்கி செலவு செய்வேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவரிடம் ரூ.500 முன்பணம் கேட்டேன். அதற்கு அவர் ஏற்கனவே வாங்கிய பணத்தை கொடுக்க வில்லை. தற்போது மீண்டும் பணம் தரமுடியாது என்று கூறினார். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து என்னை வேலையில் இருந்து நீக்கி விட்டார்.
நேற்று முன்தினம் இரவு அவரது இரும்பு கடைக்கு சென்று அவரிடம் மீண்டும் வேலை கொடுக்கும்படியும், தற்போது ரூ.500 பணம் வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் வேலையும் இல்லை, பணமும் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அங்கு கிடந்த சமையல் கியாசுக்கு பயன்படுத்தப்படும் டியூப்பாலும், கையாலும் கழுத்தை இறுக்கி அன்பழகனை கொலை செய்தேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் முனியப்பன் கூறியுள்ளார்.