நாமகிரிப்பேட்டை அருகே'நிலத்தை பிரித்து தராததால் பெரியப்பாவை அடித்துக்கொன்றேன்'
நாமகிரிப்பேட்டை அருகே நிலத்தை பிரித்து தராததால் பெரியப்பாவை அடித்துக்கொன்றேன் என கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ராசிபுரம்
விவசாயி அடித்துக்கொலை
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு மேற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்த அவரது தம்பி பாதருக்கும் (55) இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று முருகேசனுக்கும், அவரது சகோதரர் மகன் தினேஷ்குமார், உறவினர்கள் விஜயபிரகாஷ் இவரது தம்பி செந்தில்குமார் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார் மற்றும் உறவினர்கள் முருகேசனை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் இறந்தார்.
வாக்குமூலம்
இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தினேஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது பெரியப்பா முருகேசன் நிலத்தை பிரித்துக் கொடுப்பதில் தாமதம் செய்து கொண்டே வந்துள்ளார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது பெரியப்பாவை அடித்துக் கொன்றேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
பின்னர் கைது செய்யப்பட்ட தினேஷ்குமாரை ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆயில்பட்டி போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி உத்தரவின் பேரில் தினேஷ்குமார் சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து தலைமறைவான அவர்களது உறவினர்கள் விஜயபிரகாஷ், செந்தில்குமார் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்..