கிரானைட், கல், மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புவியியல் மற்றும் சுங்கப்பிரிவு அதிகாரி கோகுல் கண்ணன் மற்றும் அதிகாரிகள் கந்திகுப்பம் அருகே அச்சமங்கலம் ஏரிக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற ஒரு லாரியை சோதனை செய்தபோது பெரிய கிரானைட் கல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கோகுல் கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரானைட் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கிருஷ்ணகிரி மேலேரி கொட்டாய் பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தபோது அதில் 4 யூனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் மூங்கில் புதூர்- மேட்டுப்பாறை சாலையில் கற்கள் கொண்டு சென்ற லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.