கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்குகாரில் கடத்திய 1,442 மதுபாட்டில்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி:
கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு காரில் கடத்திய 1,442 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தலைமையில் கலால் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 90 மில்லி அளவு கொண்ட 960 கர்நாடக மாநில மதுபாட்டில்கள், 180 மில்லி அளவு கொண்ட 482 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2 பேர் கைது
இதை தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 35), கிருஷ்ணகிரி நடுப்பட்டி அருகே உள்ள பாண்டவர் கொட்டாயை சேர்ந்த சந்திரசேகர் (36) என்பதும், அவர்கள் கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் காரில் இருந்த ரூ.86 ஆயிரத்து 760 மதிப்புள்ள 1,442 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய திருப்பத்தூர் காகங்கரையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை தேடி வருகின்றனர்.
தாபா ஓட்டல்
இதேபோல் கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள தாபா ஓட்டலில் சோதனை செய்தபோது அங்கு ரூ.1,800 மதிப்புள்ள 10 மதுபாட்டில்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை வைத்திருந்த வேட்டியம்பட்டியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.