வேப்பனப்பள்ளியில் இருந்து கர்நாடகாவிற்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 1,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கிருஷ்ணகிரி:
வேப்பனப்பள்ளியில் இருந்து கர்நாடகாவிற்கு வேனில் கடத்த முயன்ற 1,800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, பரதநேரு, மூர்த்தி மற்றும் போலீசார், குருபரப்பள்ளி-சின்னகொத்தூர் சாலையில் சரவணபுரம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 50 மூட்டைகளில் 1,800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வீரராகவன் (வயது 34) என்பது ெதரியவந்தது.
கைது- பறிமுதல்
வேப்பனப்பள்ளி அருகே உள்ள எட்ரப்பள்ளி, சிந்தகும்மனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வீரராகவனை போலீசார் கைது செய்தனர். மேலும் 1,800 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.