1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
குமாரபாளையம் அருகே 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அதனை பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்தனர்.
1 டன் ரேஷன் அரிசி
குமாரபாளையத்தை அடுத்த கல்லாங்காட்டுவலசு அருகே உள்ள வி.மேட்டூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. அந்த பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 23 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது
பின்னர் 1 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர். விசாரணையில் ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா குருப்பநாய்க்கன்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த சக்திவேல் (வயது 34) என்பவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இதுபோன்று அவர் வேறு எங்காவது ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ளாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.