1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
ராமநாதபுரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் போலீஸ்காரர்கள் முத்துக்கிருஷ்ணன், குமாரசாமி, தெய்வேந்திரன் ஆகியோர் ராமநாதபுரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் அச்சுந்தன் வயல் சோதனை சாவடி அருகில் அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். இந்த சோதனையில் அந்த வாகனத்தில் 40 மூடைகளில் தலா 40 கிலோ எடையுள்ள 1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.
2 பேர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாயல்குடி பிள்ளையார் குளம் பகுதியை சேர்ந்த பாண்டித்துரை (வயது 43), லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரான வீராசாமி (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் 1,600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
ரேஷன் அரிசியை பாண்டித்துரை எந்தெந்த பகுதிகளில் இருந்து? யாரிடம் இருந்து சேகரித்து வாங்கி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.