பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்திய 80 கிலோ குட்கா பறிமுதல் பெண் உள்பட 3 பேர் கைது


பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்திய 80 கிலோ குட்கா பறிமுதல் பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2023 7:45 PM GMT (Updated: 10 July 2023 11:29 AM GMT)

பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்திய 80 கிலோ குட்கா பறிமுதல் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

ஓமலூர்

பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்திய 80 கிலோ குட்காவை தீவட்டிப்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வருவதாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் தொப்பூர்-தீவட்டிப்பட்டி சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த காரை நிறுத்தி போலீசார், டிரைவர் மற்றும் அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை செய்தனர். அப்போது காரின் பின் பகுதியில் மூட்டை மூட்டையாக குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பெண் உள்பட 3 பேர் கைது

அவர்கள் திருச்சி பாலக்கரை என்.எம். தெருவை சேர்ந்த முகமது தயூப் (வயது45), அவரது தம்பி அப்துல் அஜிஸ் (43), இவர்களது உறவினர் திருச்சி பாலக்கரை வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்த யாஸ்மின் (24) என்பதும், பெங்களூருக்கு குடும்பத்துடன் செல்வது போல் சென்று அங்கிருந்து குட்காவை காரில் கடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 80 கிலோ குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story