கார்களில் கடத்த முயன்ற 790 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக சேலம், சென்னைக்கு கார்களில் கடத்த முயன்ற 790 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஓமலூரை சேர்ந்த டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்:
பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக சேலம், சென்னைக்கு கார்களில் கடத்த முயன்ற 790 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஓமலூரை சேர்ந்த டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவல்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு ஓசூர் வழியாக காரில் குட்கா கடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் டவுன் போலீசார், நேற்று முன்தினம் இரவு ஓசூரில் ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள டேனீஸ்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் (வயது 27) என்பது தெரியவந்தது.
2 டிரைவர்கள் கைது
இவர் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கார் டிரைவரை கைது செய்தனர். மேலும் கார் மற்றும் ரூ.3 லட்சத்து 4,500 மதிப்பிலான 440 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று மாலை ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெங்களூருவை சேர்ந்த நாகேஷ் (32) என்பதும், சென்னைக்கு குட்கா கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் காருடன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.