பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் பறிமுதல்


பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் பறிமுதல்
x

தஞ்சை மாவட்டத்தில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 5 மதுபான பார்களில் விற்பனைக்காக பெட்டி, பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை விற்பனை நடைபெறும். ஆனால் இந்த நேரங்களை தவிர மதுபானக்கடைகள் திறப்பதற்கு முன்பாகவும், மூடிய பிறகும் சில பகுதிகளில் மதுபான பார்களில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவுக்கு புகார்கள் வந்தன.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தனிப்படை போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், போலீஸ் ஏட்டுகள் உமாசங்கர், ராஜேஷ், போலீஸ்காரர்கள் அருள்மொழிவர்மன், அழகுசுந்தரம், நவீன் ஆகியோர் தஞ்சை, துறையூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் பார்கள், மற்றும் துறையூரில் உள்ள ஒரு பெட்டிக்கடை ஆகிய இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

பெட்டி, பெட்டியாக மது பறிமுதல்

இதில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் முன்பே பார்கள் திறந்து அதில் மதுப்பாட்டில்கள் விற்பனை செய்வதற்காக பெட்டி, பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து விற்பனைக்காக பட்டுக்கோட்டையில் 3 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பீர், பிராந்தி என 700 மதுபாட்டில்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. துறையூர் மற்றும் தஞ்சையில் 2 இடங்களில் 300 பீர், 500 குவாட்டர் மதுபாட்டில்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன.

5 பேர் கைது

இதுதொடர்பாக பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளையை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 50), முதல்சேரியை சேர்ந்த பாலுசாமி (47), ஒரத்தநாட்டை சேர்ந்த ரமேஷ் (46), தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30), பாலோபநந்தவனத்தை சேர்ந்த தமிழரசன் (28) ஆகிய 5 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை, தனிப்படை போலீசார் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மதுவிலக்கு போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்








Next Story