காரில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
வேப்பனப்பள்ளியில் இருந்து கர்நாடகாவுக்கு காரில் கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன தணிக்கை
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வேப்பனப்பள்ளி- குடிப்பள்ளி சாலையில் கொங்கனப்பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அதில், 50 கிலோ எடை கொண்ட 15 சாக்கு மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் கார் டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அதில் டிரைவர் ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த ஜாவித் (வயது 35) என்பதும், மற்றொருவர் வேப்பனப்பள்ளி அடுத்த அரியனப்பள்ளியை சேர்ந்த சம்சு (34) என்பதும் தெரியவந்தது.
கைது- பறிமுதல்
இவர்களில் சம்சு வேப்பனப்பள்ளி பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் உள்பட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.