ஆட்டோவில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரம் அருகே ஆட்டோவில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி தலைமையிலான அதிகாரிகள், நேற்று விழுப்புரம் அருகே ஒதியத்தூர் பகுதியில் திடீர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த ஆட்டோவினுள் சாக்கு மூட்டைகளில் 1,900 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், வடகரைத்தாழனூர் பகுதியை சேர்ந்த வீரமணி மகன் சகாதேவன் (வயது 32) என்பதும், இவர் அதே பகுதியில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அதனை திருக்கோவிலூர் பகுதிக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாதேவனை கைது செய்து ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.