இருதரப்பினரிடையே மோதல்; கிராம நிர்வாக அதிகாரி உள்பட 9 பேர் கைது
இருதரப்பினரிடையே மோதல் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
வையம்பட்டி:
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
இருதரப்பினரிடையே மோதல்
கரூர் மாவட்டம், இடையபட்டியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 37). இவர் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், தவளவீரன்பட்டி அருகே உள்ள ராமநாதபுரத்திற்கு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடுப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (40) என்பவர் அந்த வழியாக சென்றபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், காளியப்பனின் மோட்டார் சைக்கிள் சாவியை கருப்பசாமி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த காளியப்பன் தனது நண்பர்களுடன் வையம்பட்டி அருகே சென்று கருப்பசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கருப்பசாமிக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினர் வந்தனர். பின்னர் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 5 மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
9 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது காளியப்பன் தரப்பினர் தவளவீரன்பட்டி கிராம நிர்வாக அலுவலரான அரவிந்தன் (27) உள்பட 2 பேரை சிறைபிடித்து வைத்திருந்தனர். போலீசார் அவர்கள் 2 பேரையும் மீட்டனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நடுப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி, தொப்பகவுண்டனூரை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தன், குமரேசன், சக்திவேல் (30), சுப்ரமணி (30), இடையபட்டியை சேர்ந்த காளியப்பன், ராமநாதபுரத்தை சேர்ந்த செந்தில் (32), சண்முகம் என்ற பாண்டி (27) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.