இருதரப்பினர் இடையே மோதல்; 7 பேர் கைது
இருதரப்பினர் இடையே மோதல்; 7 பேர் கைது
கபிஸ்தலம்:
சுவாமிமலை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தகராறு
சுவாமிமலையை அடுத்த திருவலஞ்சுழியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சுவாமிமலை கலைஞர் காலனியை சேர்ந்த ராஜ்குமார்(வயது22), பிரவீன்(23) ஆகியோர் மதுபாட்டில்கள் வாங்க சென்றனர். அப்போது திருவலஞ்சுழி அம்மன் திடல் பகுதியை சேர்ந்த முருகேஷ்(28) என்பவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் பாதையை அடைத்தபடி குறுக்கே நின்று கொண்டிருந்தார். இதனை ராஜ்குமார் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகேஷ் தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் ராஜ்குமாரின் தலையில் அடித்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.
படுகாயம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜ்குமாரின் நண்பர்களான கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த 7 பேர் சேர்ந்து முருகேஷ் வீட்டிற்கு சென்று அங்கிருந்த விக்னேஷ், தினேஷ், ராமச்சந்திரன், ஜெயலட்சுமி ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இதில் விக்னேஷ், ஜெயலட்சுமி, தினேஷ், முருகேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
7 பேர் கைது
இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பேபி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாமிமலை கலைஞர் காலனி பகுதியை சேர்ந்த சரத்குமார்(27), வசந்தகுமார்(20), தனுஷ் (19), அந்தோணி(19), சந்தோஷ்(19) ஆகியோரையும், மற்றொரு தரப்பை சேர்ந்த தினேஷ்(25), பாபநாசம் பகுதியைச்சேர்ந்த ராமச்சந்திரன்(30) ஆகியோரையும் கைது செய்தனர்.