முதல் மரியாதை செய்வதில் மோதல்; கோவில் திருவிழா பாதியில் நிறுத்தம்
ஆம்பூர் அருகே யார் முதல் மரியாதை செய்வது? என்பதில் ஏற்பட்ட மோதலால் கோவில் திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது.
கணக்கு காட்டவில்லை
ஆம்பூரை அடுத்த பாலூர் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை முன்னாள் ஊர் நாட்டாண்மை மற்றும் அவரது மகன் ஆகியோர் நிர்வகித்து வந்தனர். அவர்கள் கணக்கு வழக்குகளை ஊர் பொதுமக்களுக்கு முறையாக காட்டவில்லை எனக்கூறப்படுகிறது.
எனவே புதிய நாட்டாண்மையை தேர்வு செய்ய வேண்டும் என ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் இது குறித்து குடியாத்தம் சப்-கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர். அப்போது இரு தரப்பினரையும் நேரில் அழைத்து சப்-கலெக்டர் வெங்கடராமன் விசாரணை நடத்தினார்.
கோவில் திருவிழா
பின்னர் அவரது உத்தரவின்படி புதிய நாட்டாண்மையை கிராம மக்கள் தேர்வு செய்தனர். இந்த நிலையில் பாலூர் கிராமத்தில் வைகாசி மாதம் நடத்த வேண்டிய கெங்கையம்மன் கோவில் திருவிழா 3 மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஊர் நாட்டாண்மை தலைமையில் நடந்தது. இரவு 11 மணி அளவில் அம்மன் சிரசு ஊர்வலம் மற்றும் பூங்கரக ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தின் போது உருமி மேளம், பம்பை மற்றும் பேண்டு வாத்தியங்கள், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. திருவிழாவின் போது முன்னாள் நாட்டாண்மை மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நாட்டாண்மை ஆகிய 2 தரப்பினரும் சீர்வரிசைகளுடன் கோவில் அருகே வந்தனர்.
பாதியில் நிறுத்தம்
அப்போது சாமிக்கு முதல் பூஜைகள் மற்றும் முதல் மரியாதை யார் செய்வது என்பது குறித்து இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் சமரசம் ஏற்படவில்லை. இதனால் திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது. சீர்வரிசையுடன் ஆர்வமாக வந்த பொது மக்களும் சாமி தரிசனம் செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பதற்றம்
கோவில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்கு இடையே அமைந்துள்ளதால் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 2 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.