உடல் அடக்கத்தில் மோதல்; ஒருவருக்கு அரிவாள் வெட்டு


உடல் அடக்கத்தில் மோதல்; ஒருவருக்கு அரிவாள் வெட்டு
x

உடல் அடக்கத்தில் மோதல்; ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

புதுக்கோட்டை

கீரனூர்:

கீரனூர் அருகே கோவில் வீரக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 30). வீரக்குடி ஊராட்சி மன்ற உறுப்பினரான இவர், குடும்பத்தகராறு காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து பாலமுருகன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பாலமுருகன் உடல் அடக்கம் செய்யும் இடத்தில் அதே ஊரை சேர்ந்த ஈம சடங்குகள் செய்யும் சின்னத்துரை (39) என்பவருக்கும், சுரேஷ் (45) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உடல் அடக்கம் முடிந்து திரும்பும்போது சின்னத்துரை மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய 2 பேரையும், சுரேஷ், பிரபு மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் வழி மறித்து சாதிப்பெயரை சொல்லி திட்டியுள்ளனர். இதில் சின்னத்துரையை கட்டையால் அடித்து அரிவாளால் தலையில் வெட்டினர். மோகன் என்பவரையும் தாக்கியுள்ளனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த சின்னத்துரையை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story