ஆம்னி பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய லாரியால் பரபரப்பு


ஆம்னி பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய லாரியால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Oct 2022 1:00 AM IST (Updated: 14 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் கணவாயில் ஆம்னி பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் டிரைவர் பலியானார். ஆம்னி பஸ்சில் வந்த பயணிகள் உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:-

தொப்பூர் கணவாயில் ஆம்னி பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் டிரைவர் பலியானார். ஆம்னி பஸ்சில் வந்த பயணிகள் உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.

சினிமாவை போல் நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

சிலிக்கன் கல் ஏற்றிய லாரி

மேகாலயாவில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு சிலிக்கன் கல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. லாரியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா (22) என்பவர் உடன் வந்தார்.

இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று அதிகாலை தொப்பூர் இரட்டை பாலம் அருகே வந்தது. அப்போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. முன்னால் பிஸ்கட் பாரம் ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி மற்றும் எதிரே வந்த ஆம்னி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த பிஸ்கட் பாரம் ஏற்றி சென்ற லாரி, எதிர் திசையில் வந்த சரக்கு வாகனம் ஒன்று மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.

ஒருவர் பலி

அடுத்தடுத்து நடந்த இந்த மோதல் சம்பவங்களால் தொப்பூர் கணவாய் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சினிமாவை போல் கண் இமைக்கும் நேரத்துக்குள் இந்த விபத்து நடந்து முடிந்தது. விபத்தில் பிஸ்கட் பாரம் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி டிரைவர் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த மாதேஸ்வரன் (63) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

மேலும் சிலிக்கன் கல் பாரம் ஏற்றி வந்த லாரி டிரைவர்கள் 2 பேர், சரக்கு வாகன டிரைவர் மற்றும் ஆம்னி பஸ்சில் வந்த 10 பேர் என 13 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பலியான மாதேஸ்வரன் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தால் சேலம்- தர்மபுரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் விபத்து மீட்பு குழுவினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

விபத்து குறித்து தொப்பூர் கணவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story