அம்மாபேட்டை அருகே தொடர் சம்பவங்களால் பரபரப்புபேக்கரி-எலக்ட்ரிக் கடைகளை உடைத்து பணம் திருட்டு


அம்மாபேட்டை அருகே தொடர் சம்பவங்களால் பரபரப்புபேக்கரி-எலக்ட்ரிக் கடைகளை உடைத்து பணம் திருட்டு
x

அம்மாபேட்டை அருகே பேக்கரி, எலக்ட்ரிக் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு போனது. மோட்டார்சைக்கிளில் முகமூடி அணிந்து வந்து தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே பேக்கரி, எலக்ட்ரிக் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு போனது. மோட்டார்சைக்கிளில் முகமூடி அணிந்து வந்து தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பேக்கரி கடையில் திருட்டு

அம்மாபேட்டை அருகே அந்தியூர் ரோட்டில் உள்ள குறிச்சி பிரிவில் தனியார் பேக்கரி கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் நேற்று காலை கடையை திறக்க வந்து பார்த்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.12 ஆயிரத்தை காணவில்லை. மேலும் கேக் உள்ளிட்ட பொருட்களையும் காணவில்லை.

நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு சென்றதை அறிந்த மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பணப்பெட்டியை உடைத்து அதிலிருந்த பணத்தையும், கேக் உள்ளிட்ட பொருட்களையும் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுதவிர எதிரே உள்ள மற்றொரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்துள்ளனர்.

கொள்ளையர்கள் 3 பேர்

இதைத்தொடர்ந்து அந்தியூர் ரோட்டில் உள்ள மறவன் குட்டை மேட்டில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடைக்கு கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். பின்னர் அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்து ரூ.3 ஆயிரத்தை திருடியுள்ளனர்.

இது குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்தனர். அதில் 3 மர்ம நபர்கள் முகமூடி அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் கடை முன்பு வருவதும், அதில் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுவதும், மற்ற 2 பேர் மோட்டார்சைக்கிளுடன் வெளியே நிற்பதும் பதிவாகியிருந்தது.

உண்டியலை தூக்கி சென்றனர்

இதேபோல் நேற்று முன்தினம் இரவு அம்மாபேட்டை கரிய காளியம்மன் கோவிலையொட்டி உள்ள ஆதிபராசக்தி கோவிலில் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை தூக்கிச்சென்று அதிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை காட்டில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

இதே போல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்தியூர் ரோட்டில் பட்டஞ்சாவடியில் உள்ள ஒரு கடையிலும், அம்மாபேட்டையில் உள்ள ஒரு பத்திர எழுத்தர் கடையிலும் திருட்டுப் போனது குறிப்பிடத்தக்கது. அம்மாபேட்டை அருகே அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வலைவீச்சு

மேற்கண்ட 3 கொள்ளை சம்பவங்களிலும் மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story