திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு: - போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்
திருப்பரங்குன்றத்தில் நேற்று போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தில் நேற்று போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முகூர்த்த காலங்களில் நெரிசல்
திருமண முகூர்த்தம் என்றாலே திருப்பரங்குன்றம் 4 ரதவீதிகளில் மணமக்கள் ஜோடிகள் மற்றும் திருமணத்துக்கு வந்த உறவினர்கள் மற்றும் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் என்று கூட்டம் அலைமோதும். இதற்கு இடையே திருமணத்துக்கு வந்தவர்கள் மற்றும் பக்தர்களின் இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் வாகன நெரிசல்கள் ஏற்படுவது உண்டு.இந்த நிலையில் நேற்று திருமண முகூர்த்தம் என்பதால் திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் 4 ரத வீதிகளிலும் கூட்டம் அலைமோதியது.
ஆம்புலன்ஸ் அலாரத்தால் பரபரப்பு
இந்த நிலையில் நேற்று பகல் 11.30 மணியளவில் மதுரையில் இருந்து நிலையூருக்கு வழக்கம் போல திருப்பரங்குன்றம் மேலரதவீதி வழியாக ஒரு அரசு பஸ் கூட்ட நெரிசலில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை நோக்கி அவசர சிகிச்சைக்காக நோயாளியை ஏற்றுக்கொண்டு ஒரு 108 ஆம்புலன்ஸ் வந்தது. மேலரதவீதியில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால் பஸ் உரிய இடத்தை விட்டு மீண்டும் செல்ல இயலாத நிலையில் திணறியது. இதற்கிடையே பஸ்சின் பின்புறமும், முன்புறமுமாக கார்கள் இருசக்கர வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இந்த நிலையில் மேலரதவீதி வளைவான சந்திப்பில் 108 ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழியின்றி நீண்ட நேரம் அலாரம் அடித்தபடியே நின்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது
15 நிமிடத்திற்கு பிறகு
இதை அறிந்த போக்குவரத்து போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்த்து ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி ஏற்படுத்தினார்கள். அதன்பின் சுமார் 15 நிமிடத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் உரிய இடத்தை விட்டு கிளம்பிச் சென்றது. அதனை அடுத்து அரசு பஸ் மற்றும் மற்ற வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக சென்றது. திருமணம், முகூர்த்த காலங்கள் மற்றும் திருவிழா காலங்களில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி ஒரே சீராக நிறுத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.