இ-சேவை மையத்தில் அலைமோதிய கூட்டம்


இ-சேவை மையத்தில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 1 Sep 2023 10:00 PM GMT (Updated: 1 Sep 2023 10:00 PM GMT)

கம்பத்தில் உள்ள இ-சேவை மையத்தில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தேனி

ஆதார் கார்டில் திருத்தம்

மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் மானியங்களை பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தற்போது மகளிர் உரிமைத்தொகை, சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக்கடன் உள்ளிட்டவற்றை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆகும். குறிப்பாக பயனாளர்களின் ஆதார் கார்டில் செல்போன் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஓ.டி.பி. எனப்படும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் சம்பந்தப்பட்ட பயனாளியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக கிடைக்கும். ஆதார் கார்டில் செல்போன் எண் இணைக்கப்படாமல் இருந்தால் குறுந்தகவல் கிடைக்காது. இதனால் மகளிர் உரிமைத்தொகை, வங்கிக்கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதையொட்டி ஆதார் கார்டில் செல்போன் எண்ணை பதிவு செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதேபோல் கம்பம், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் ஆதார் கார்டில் செல்போன் எண்ணை பதிவு செய்ய கம்பம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்துக்கு சென்று பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் ஒரேயொரு இ-சேவை மையம் மட்டுமே உள்ளதால் தினமும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பொதுமக்கள் கால்கடுக்க வெகுநேரம் நிற்க வேண்டிய சூழல் உள்ளது.

தள்ளுமுள்ளு

இந்தநிலையில் நேற்று கம்பத்தில் உள்ள இ-சேவை மையத்தில் செல்போன் எண், முகவரி மாற்றம், கைரேகை பதிவிற்காக காலை 6 மணி முதல் பொதுமக்கள் வரிசையில் நிற்க தொடங்கினர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

இதனால் இ-சேவை மைய பணியாளர் வந்தவுடன் வரிசையில் நிற்காமல் பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதியடைந்தனர். இதையடுத்து அங்கு நின்றிருந்த சிலர் பொதுமக்களை வரிசையில் நிற்குமாறு வலியுறுத்தினர். அதன்பிறகு பொதுமக்கள் வரிசையில் நின்றபடி, ஆதார் சேவைகளுக்கு பதிவு செய்தனர்.

கூடுதல் மையங்கள்

இதுகுறித்து இ-சேவை மையத்துக்கு வந்த பொதுமக்கள் கூறுகையில், "கடந்த ஆண்டு வரை வங்கிகளில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டு, ஆதார் கார்டில் திருத்தம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வங்கிகளில் அதன் ேசவை நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் கம்பம் நகராட்சியில் உள்ள ஆதார் கார்டு சேவை மையத்தில் மட்டுமே ஆதார் கார்டில் திருத்தம் செய்யப்படுகிறது. இதனால் இங்கு தினமும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 40 நபருக்கு மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் இ-சேவை மையங்கள் அமைக்க வேண்டும். அதேபோல் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்" என்றனர்.


Related Tags :
Next Story